Skip to content

6 மாதத்திற்கு முன்பு நாய் கடித்த நபர் பலி…வேலூரில் சோகம்

  • by Authour

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பிச்சாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (45), இவர் கூலி தொழில் செய்து வந்தார். இவரது மனைவி யமுனா(40) இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பாக ( ஜூன் 9-ந் தேதி) வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று கொண்டிருந்தபோது சரவணனை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் அவரை உறவினர்கள்  அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் சரவணன் மது போதையில் இருந்ததால் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிக்கவில்லை‌ என்ற கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் வந்து நாய் கடிக்கு ஊசி செலுத்தி கொண்டு சென்றார். அதன் பிறகு மீண்டும் சரவணன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரவில்லை. இதனால், மாத கணக்கில் சரவணன் நாய் கடிக்குக்கு சிகிச்சை பெறாமல் இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில‌ நாட்களாக சரவணன் உடல்நிலை பாதிக்கப்பட்டு காணப்பட்டார். மேலும், தண்ணீரை பார்த்து பயந்து குடும்பத்தாரிடம் சண்டையிட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை (17-ம் தேதி இரவு) அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால் அவரது குடும்பத்தினர் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது ‘ரேபிஸ்’ நோய்க்கான அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தொடர்ந்து அவரை தீவிர‌ சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சரவணன் செவ்வாய்க்கிழமை அதிகாலை (18-ம் தேதி) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, தகவலறிந்த வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் சரவணன் நாய் கடித்து உயிர் இழந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!