இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. ஏற்கனவே இங்கிலாந்து 2-1 எனற நிலையில் முன்னணியில் உள்ளது. தற்போது மான்செஸ்டரில் 4வது போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்தது. முதல் நாள் ஆட்டத்தில் பாதத்தில் அடி வாங்கிய ரிஷப் பந்த் எலும்பு முறிவு காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். உண்மையில், இன்னும் இந்த டெஸ்ட் போட்டியில் 3 நாட்கள் இருக்கும் போதும், கடைசி டெஸ்ட் போட்டி என்பது மிக முக்கியமான போட்டியாக இருக்கும்போதும் இந்திய அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டெஸ்ட்டில் கையில் அடிபட்டு ஆட முடியாமல் தவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் வீசிய ஃபுல் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடும் முனைப்புடன் வலது பாதத்தில் சரியான அடி வாங்கி ரத்தம் கொட்டியதோடு கால் உடனேயே பெரிய வீக்கம் கண்டது. இந்நிலையில், ஸ்கேன் எடுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவர, இந்தத் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது சொந்த கரியரும் பாதிக்கப்படுவதோடு, இந்திய அணியையும் கைவிட்டு விட்டார் ரிஷப் பந்த். சிந்திக்காமல் செய்த தவற்றினால் அவர் இப்போது 7-8 வாரங்களுக்கு கிரிக்கெட் ஆட முடியாது. இத்தனைக்கும் இந்திய அணியின் வைஸ் கேப்டன் ரிஷப் பந்த். அவருக்கு இன்னும் கூடுதல் பொறுப்புணர்வு தேவை என்பதே இந்தக் காயம் காட்டும் உண்மை. இப்போது, ஒருவேளை இஷான் கிஷன் மாற்று வீரராக தேர்வு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
நேற்று 2 நாள் ஆட்டம் முடிந்த நிலையில் இந்திய அணி3 58 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து225 ரன்கள் குவித்தது. இன்னும் கைவசம் 8 விக்கெட்டுகள் இருப்பதால் இன்று அதிக ரன்கள் குவிக்கும். இந்த 4 வது டெஸ்டிலும் இங்கிலாந்தின் கை ஓங்கியே உள்ளது. இந்த டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றால தொடரை கைப்பற்றி விடும்.