சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதி உச்சத்தை அடைந்துள்ளது. பிஎப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் அந்நாட்டில் பேராபத்தையும், பேரழிவையும் ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அனைத்து மாநிலங்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் அமல்படுத்தப்பட தொடங்கி விட்டன. இது தொடர்பாக கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியது: கர்நாடகாவில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்படுகிறது. திரை அரங்குகள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அதேபோல் மதுபான கூடங்களிலும் முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும். அனைத்து இடங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் அதிகாலை 1 மணிக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.