கரூர் மாநகராட்சிக்கு சொந்தமான வாங்கல் சாலை குப்பை கிடங்கில் இன்று திடீரெனப் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மாநகராட்சியின் 48 வார்டுகளில் இருந்தும் சேகரிக்கப்பட்டு மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளில் தீ பற்றியதால், அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்தது.
தகவலறிந்து வந்த கரூர் தீயணைப்பு துறையினர், தீயணைப்பு வாகனங்கள் மற்றும் லாரிகள் மூலம் தண்ணீரைப் பீச்சி அடித்துத் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பலத்த காற்று வீசுவதால் தீ மளமளவெனப் பரவி வருவதால் அணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இதனால் வாங்கல் சாலை வழியாக நாமக்கல் மற்றும் சேலம் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் புகைமூட்டத்தால் திணறி வருகின்றனர்.
சுற்றியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்துத் தீயணைப்புத் துறையினர் தெரிவிக்கையில், “வெறும் தண்ணீரை ஊற்றி மட்டும் இந்தத் தீயைக் கட்டுப்படுத்த முடியாது; மாநகராட்சி நிர்வாகம் போதிய பொக்லின் இயந்திரங்களைக் கொண்டு வந்து குப்பைகளைச் சரி செய்தால் மட்டுமே தீயை முழுமையாக அணைக்க முடியும்” எனத் தெரிவித்தனர்.

