Skip to content

செம்மொழி தமிழாய்வு நிறுவன துணைத்தலைவராக சுதாசேசய்யன் நியமனம்….. திருக்குறள் கூட்டமைப்பு கண்டனம்

  • by Authour

மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம், சென்னை பெரும்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இங்குச் செவ்வியல் தமிழ் நூல்கள், பழங்கால இலக்கிய, இலக்கணம் தொடர்பான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், தமிழ்மொழி ஆய்வு மற்றும் தமிழ் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

தமிழக முதல்வரைத் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தின் இயக்குநராகப் பேராசிரியர் ரா.சந்திரசேகரன் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராக டாக்டர் சுதா சேஷய்யனை நியமித்து மத்திய கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  தமிழறிஞர்களை நியமிப்பதற்கு பதில் தமிழுக்கு எதிரானவரை நியமிப்பதா, என கடும் கண்டனம் கிளம்பி உள்ளது. சுதாவை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என தமிழறிஞர்கள் பலர் கூறி உள்ளனர்.

இந்த நிலையில் உலகத் திருக்குறள் கூட்டமைப்புத் தலைவர் லயன். மு. ஞானமூர்த்தியும் இதனை கண்டித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகவும் துணைவேந்தராகவும் இருந்து ஓய்வு பெற்றவர் சுதா. அவர் பணியாற்றிய காலத்தில் மருத்துவத் துறையில் பல்வேறு குளறுபடிகளைச் செய்தவர்.

பணி ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆன டாக்டர் சுதா சேஷையனை சிலரின் அழுத்தம் காரணமாகச் செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்குத் துணைத்தலைவராக மத்திய அரசு நியமித்துள்ளது. எத்தனையோ தமிழ் அறிஞர்கள் இருக்கின்றனர்.அவர்களை விட்டுவிட்டு மருத்துவத் துறையைச் சேர்ந்தவரை நியமிப்பது கேலிக்கூத்தாகும்.

திறவுகோலைத் திருடனிடமே கொடுப்பதுபோல், தமிழை முற்றாக அழிக்க நினைக்கும் மாபாதகரைச் செம்மொழி நிறுவனத்திற்குள் நுழைத்திருப்பது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.  டாக்டர் சுதா ஷேஷையன் செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவர் நியமனத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெறவேண்டும். தமிழ்ச் சமூகம் இதற்கு எதிராக மிகக் கடுமையாக எதிர்வினையாற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!