மயிலாடுதுறை நகரப் பகுதியில் அமைந்துள்ள காவேரி துலா கட்டம் 12 தீர்த்த கிணறுகள் உள்ள புனித இடமாகும். காசிக்கு இணையாக கருதப்படும் இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் கொண்டாடி புனித நீராடி செல்வர். ஆனால் மேட்டூரில் திறக்கப்பட்ட உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடி மயிலாடுதுறை மாவட்டத்தில் கடலில் கலந்து வரும் நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்து சேரவில்லை. இதனால் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் நகராட்சி நிர்வாகம்’ சார்பில் போர்வெல் மூலம் புஷ்கர தொட்டியில் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டு பக்தர்கள் புனித நீராடும் வகையில் பிரத்யேகமாக குழாய் மூலம் ஷவர் அமைக்கப்பட்டுள்ளது. காவேரி ஆற்றில் தண்ணீர் இல்லாததால் குறைந்த அளவே கூட்டம் காணப்பட்டது. ஆடிப்பெருக்கினை முன்னிட்டு பக்தர்கள் காவேரி அன்னையை கன்னிப் பெண்ணாக நினைத்து பிரத்யேக ஷவரில் புனித நீராடி காப்பரிசி , கண்ணாடி வளையல் , மஞ்சள் குங்குமம் வைத்து தீபமிட்டு வழிபாடு மேற்கொண்டனர். பின்னர் மஞ்சள் நூலினை கைகள் மற்றும் கழுத்தில் பெண்கள் கட்டிக் கொண்டு காவேரி தாயை வழிபட்டனர். மேலும் புதுமண தம்பதியினர் தாலி பிரித்து கட்டிக் கொள்ளும் பாரம்பரியமான சடங்கு காவிரி ஆற்றின் கரையில் நடைபெற்றது. காவிரி ஆற்றில் தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மயிலாடுதுறை மாவட்ட எல்லை பகுதிக்கே தண்ணீர் வந்தடையாததால் ஆடிப்பெருக்கு விழாவை மகிழ்ச்சியாக கொண்டாட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.