நர்நாடகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்க்கிறது. இதன் காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பின. இதனால் 2 அணைகளின் பாதுகாப்பு கருதி வினாடிக்கு 1 லட்சத்து 16 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று இரவு 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது.
இதனால் மேட்டூர் அணை நேற்று இரவு நடப்பாண்டில் 5-வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இன்று அதிகாலை 4 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 120.09 அடியை எட்டியது. மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1,08,529 கன அடியில் இருந்து 1,16,683 கன அடியாக அதிகரித்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 120.13 அடியாக அதிகரித்தது. அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 14 ஆயிரத்து 98 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையின் நீர் இருப்பு 93.678 டிஎம்சி. அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து 16 கண் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் டெல்டா மாவட்டங்களில் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு முக்கொம்பு மேலணையில் இருந்து வினாடிக்கு 33 ஆயிரத்து 413 கனஅடி வீதம் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கொள்ளிடத்தில் 4389 கனஅடி திறக்கப்படுகிறது. மொத்தத்தில் கொள்ளிடத்தில் வினாடிக்கு 37,802 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.