தென்மேற்கு பருவமழை அந்தமானில் தொடங்கி விட்டது. இந்த ஆண்டு கேரளத்தில் வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கும் என வானிலை மையம் அறிவித்து உள்ளது. அதாவது ஜூன் முதல்வாரத்தில் கேரளத்திலும், அதற்கு அடுத்த 2 வாரத்தில் கர்நாடகத்திலும் தென் மேற்கு பருவமழை தொடங்கும்.
ஆனால் இந்த ஆண்டு வரும் 27ம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளத்தில் தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ள நிலையில் இப்போதே கேரளா, கர்நாடகத்தில் மழை கொட்டித் தீா்க்கிறது. கர்நாடகத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மட்டுமல்ல, பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீா்க்கிறது.
இதனால் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம், கிருஷ்ணகிரி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் தென் பெண்ணை ஆற்றில் அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதுபோல மேட்டூர் அணைக்கும் கடந்த 3 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இன்று காலை 8 மணி அளவில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 12, 819 கனஅடியாக இருந்தது. பின்னர் 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.
அணையின் நீர்மட்டம் 110.03 அடி. அணையில் 78.451 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1002 கனஅடி மட்டும் திறக்கப்படுகிறது.
மேட்டூர் அணையின் மொத்த உயரம் 120 அடி. இன்னும் 10 அடி தண்ணீர் வந்தால் அணை நிரம்பி விடும். குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை வரும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், இதே அளவு தண்ணீர் தொடர்ந்து வந்தால், அணை ஜூன் முதல் வாரத்திலேயே நிரம்பி விடும் நிலை ஏற்படும். எனவே அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.