கர்நாடக அரசு காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் விட மறுத்ததால், கடந்த மாதம் 10ம் தேதி காலை மேட்டூர் அணை மூடப்பட்டது. அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக(7.88 டிஎம்சி) இருந்தது. எதிர்வரும் கோடை கால குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. தற்போது டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த நிலையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கடந்த வாரம் சில நாட்கள் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கும் அதிகமான தண்ணீர் வந்தது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணை நீர்மட்டம் 60.07 அடி. அணைக்கு வினாடிக்கு 3,297 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 250 கனஅடி திறக்கப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 24.73 டிஎம்சி.