தென் மேற்கு பருவமழை கர்நாடகம், கேரளா மற்றும் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களில் பலமாக பெய்து வருகிறது. கேரளாவில் வயநாடு, நீலகிரி பகுதிகளில் மிக கனமழை தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் சிக்மகளூர், ஹாசன் மாவட்டங்களிலும் கனமழை பெய்வதால் ஹேமாவதி அணை ஒரு வாரத்தில் நிரம்ப வாய்ப்பு உள்ளது. ஹாரங்கி அணை 80 சதவீதம் நிரம்பிய நிலையில் வினாடிக்கு 19,000 கனஅடி உபரி நீர் கே.ஆர்.எஸ். அணைக்கு திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 36,000 கனஅடியாக உள்ள நிலையில் நீர் திறப்பு 2500 கனஅடியாக உள்ளது.
கபினி அணை ஏற்கனவே நிரம்பியுள்ளதால் மேலும் அதிக அளவில் காவிரியில் உபரி நீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. மேட்டூர் அணைக்கு இன்று பிற்பகல் 35,000 முதல் 40,000 கனஅடி வரை நீர்வரத்துக்கு வாய்ப்புள்ளது. . வயநாடு, நீலகிரி பகுதிகளில் மிக கனமழை தொடரும். காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மேலும் சில நாட்கள் கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 93.47 டிஎம்சியை எட்ட வாய்ப்பு உள்ளது. கேரளாவில் வயநாடு மற்றும் கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இன்னும் 1 வாரம் பலத்த மழை பெய்தால் மேட்டூர் அணை இன்னும் 10 நாட்களில் நிரம்ப வாய்ப்பு உள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா சாகுபடி நன்றாக நடக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.