அரியலூரை அடுத்த ஜெமீன் பேரையூர் கிராமத்தில் நலத்திட்ட பணிகளை துவங்கி வைக்க வருகை தந்த குன்னம் சட்டமன்ற உறுப்பினரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கரிடம் ஜெமீன் பேரையூர் தங்கள் கிராமத்திற்கு பேருந்து வசதி கேட்டனர். தனது உதவியாளரிடம் கூறி உடனடியாக பேருந்து கிராமத்திற்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க போக்குவரத்து துறை அமைச்சர் உத்தரவிட்டார். பின்னர் தனது காரில் ஏறுவதற்காக நடந்து வருகையில் கூடியிருந்த பொது மக்களை பார்த்து கும்பிட்டு நலம் விசாரித்து வந்து கொண்டிருந்தார். அப்போது சுமார் 80 வயதுடைய அதிமுக தொண்டர் ஒருவர், கழுத்தில் அதிமுக கரை போட்ட துண்டுடன் வந்து அமைச்சரை வரவேற்றார்.
இதனை கவனித்த போக்குவரத்து துறை அமைச்சர் அதிமுக துண்டுடன் தன்னை வந்து வரவேற்றமைக்கு, மிக்க நன்றி எனக்கூறி, செல்லப்பிள்ளையிடம் கை குலுக்கி மகிழ்ந்தார்.
உடனே அந்த முதியவர், நான் தீவிர MGR ரசிகர் என்று பதில் அளித்தார். உடனடியாக போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர்,
MGR ரசிகர்னா இனிமே நீங்க தளபதியோட தான் இருக்கணும் எனக் கூறியதால் அங்குள்ள அனைவருமே உற்சாகத்தில் சிரித்து மகிழ்ந்தனர்.
இதனையடுத்து அந்த முதியவர் சரிங்க என பதிலளிக்க, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் ‘சிறப்பு, நன்றி’ என்றவாறு அங்கிருந்து புறப்பட்டு சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
