Skip to content

பெண்களை இழிவுபடுத்தும் சி.வி.சண்முகம்… அமைச்சர் கீதா ஜீவன் காட்டம்

தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர் திட்டங்களை குறிப்பிட்டு, அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். “இலவசமாக மிக்சி, கிரைண்டர் வழங்குவது போல் மனைவியையும் இலவசமாக வழங்குவார்கள்” என்று அவர் கூறியது, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது. இது, அதிமுகவின் பெண்கள் மீதான வக்கிரமும் வன்மமும் வெளிப்படுத்தியுள்ளது என்று அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாகக் கண்டித்துள்ளார்.

இதுகுறித்து கண்டன அறிக்கை வெளியிட்டுள்ள கீதா ஜீவன் ” அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது! பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம்!விடியல் பயணப் பேருந்துகளை லிப் ஸ்டிக் பூசிய பேருந்துகள் எனக் கேவலமாகப் பேசியவர்தானே எடப்பாடி பழனிசாமி. அவரின் அடிவருடி சி.வி.சண்முகத்தின் நாக்கில் நாராசம்தானே வரும்! கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம்!

அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், ”தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்” என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.

‘’பொண்டாட்டிகளையும் இலவசமாகத் தருவார்கள்’’ எனப் பெண்களை இலவசத்தோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் சி.வி.சண்முகம். அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம்.

ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டிப்பைக்கூடச் செய்யவில்லை. பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அந்த சொரணைகூட பழனிசாமிக்கு இருக்காதா? ஒருவர் அடிமையாய் மாறிவிட்டால், அவரிடம் ஆளுமையும் சூடு சொரணையும் எப்படி இருக்கும்? உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் உங்களைப் பார்த்து என்ன நினைப்பார்கள்?

பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு. பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள்” எனவும் காட்டத்துடன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!