Skip to content

எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி

பெரம்பூர், ஓட்டேரி செல்லப்பா தெருவில், ‘’சிங்கார சென்னை 2.0’’ திட்ட நிதியின் கீழ் 4 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி பணிகளை துவக்கிவைத்தார். இதில், சென்னை மேயர் பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ, சென்னை மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையாளர் கௌஷிக் கலந்துகொண்டனர்.

இதையடுத்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது; திருப்பரங்குன்றம் விவகாரம் விவாதமாவதற்கு ஒரு காரணமும் இல்லை. இனத்தால், மதத்தால், மொழியால் மக்களை பாகுபடுத்த நினைக்கும் தீய சக்திகள்தான் காரணம். இந்த அரசை பொருத்தவரை சட்டத்தின் ஆட்சி நடத்துகிறது. சட்டத்தை யாரெல்லாம் கையில் எடுத்துக்கொள்ள நினைக்கிறார்களோ அவர்கள் மீது முதல்வரின் இரும்புக்கரம் பாயும். அந்த வகையில் எச்.ராஜா சட்டத்தை கையில் எடுத்திருக்கிறார். அவரை போலீசார் கைது செய்துள்ளது.

மென்மையான போக்கை கடைபிடிப்பதால், சமாதானம் பேச நினைப்பதால் எச்.ராஜா யாரையும் கோழை என்று நினைக்கவேண்டாம். இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிராக மதம் சார்ந்த பிரச்னையை கையில் எடுக்கும்போது சிறுபான்மையினரை அரவணைக்க வேண்டியது அரசுதான். இது எல்லோருக்கும் எல்லாமுமான அரசு. ஜாதி, மத, பேதம் என்பது கிடையாது. இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என அனைவரையும் ஒன்றாக பார்க்கிற அரசு. சட்டம் எங்கும் மீறப்பட்டாலும் அதன் மீது நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!