Skip to content

முக்கொம்பில் சிறுமிக்கு பாலியல் தொல்லை…. எஸ்ஐ , 2 போலீஸ் டிஸ்மிஸ்- டிஐஜி அதிரடி

  • by Authour

திருச்சி மாவட்டம் முக்கொம்பு சுற்றுலா தலத்தில் கடந்த 4.10.23 அன்று தனது காதலருடன் தனியாக இருந்த 17 வயது  திருச்சி சிறுமியை மிரட்டி அந்த சிறுமிக்கு ஜீயபுரம் காவல் உதவி ஆய்வாளர் சசிகுமார், நவல்பட்டு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் பிரசாத், திருவெறும்பூர் பகுதி நெடுஞ்சாலை ரோந்து காவலர் சங்கர ராஜபாண்டியன், ஜீயபுரம் போக்குவரத்து பிரிவு காவலர் சித்தார்த்தன் ஆகியோர் பாலியல் தொந்தரவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக அந்த சிறுமி ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் , உதவி ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உதவி ஆய்வாளர் உள்ளிட்ட நால்வரையும் அப்போது திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த வருண்குமார் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே இந்த குற்றம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் உதவி ஆய்வாளர் சசிகுமார், காவலர்கள் சித்தார்த்தன், பிரசாத் ஆகியோர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்கள் மூவரையும் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கி திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர் வருண்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு காவலரான சங்கரராஜ பாண்டியன் கஞ்சா கடத்திய வழக்கில் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் எனவே அவரிடம் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது. அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என டிஐஜி வருண் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!