தாய்லாந்தில் வரும் நவம்பர் மாதம் 74வது மிஸ் யுனிவெர்ஸ் போட்டி நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்கும் மிஸ் யுனிவர்ஸ் இந்தியாவை தேர்வு செய்வதற்கான போட்டி ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெயப்பூரில் நேற்று நடந்தது. ஏராளமான போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மணிகா விஸ்வகர்மா மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டத்தை வென்றார். கடந்த ஆண்டு வெற்றியாளர் ரியா சிங்கா அவருக்கு மகுடம் சூட்டினார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தன்யா சர்மா, ஹரியானாவைச் சேர்ந்த மேஹக் திங்க்ரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகரைச் சேர்ந்த மணிகா, தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். 22 வயதான இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற மிஸ் யுனிவெர்ஸ் ராஜஸ்தான் போட்டியிலும் அவர் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது. பல துறைகளில் கவனம் செலுத்தும் நபரான மணிகா தற்போது, தனது பொலிடிகல் சயின்ஸ் மற்றும் பொருளாதார பட்டப்படிப்பின் மூன்றாமாண்டில் கவனம் செலுத்தி வருகிறார். இதுபோக தனது இளம்பருவத்திலேயே பல பிரிவுகளில் தன்னை நிரூபித்துள்ளார்.
அதன்படி, பரதநாட்டிய பயிற்சி, ஓவியம் ஆகிய கலைகளில் கைதேர்ந்தவராக திகழ்கிறார். வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட்ட BIMSTEC Sewocon நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். ஜேஜே ஸ்கூல் ஆஃப் ஆர்ட்ஸ் மற்றும் லலித் கலா அகாடெமி ஆகிய விருதுகளையும் மணிகா பெற்றுள்ளார்.