Skip to content
Home » உலகின் வளர்ச்சிக்கு இந்தியா துணை புரியும்

உலகின் வளர்ச்சிக்கு இந்தியா துணை புரியும்

மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரில் புலம்பெயர் இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இதில் சுரிநாம் நாட்டு அதிபர் சந்திரிகா பிரசாத் சந்தோகி சிறப்பு விருந்தினராகவும், கயானா நாட்டு அதிபர் முகமது இர்பான் அலி தலைமை விருந்தினராகவும் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: புலம்பெயர் இந்தியர்களை வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் தூதர்களாக நான் பார்க்கிறேன். யோகா, ஆயுர்வேதம், குடிசை தொழில், கைவினை பொருட்கள், சிறு தானியங்கள் ஆகியவற்றுக்கும் அவர்கள் தூதர்களாக திகழ்கிறார்கள். நாடு சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கிய 25 ஆண்டுகால பயணத்தை தொடங்கி இருக்கிறது. இந்தப் பயணத்தில் புலம்பெயர் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். இந்தியாவின் உலகளாவிய பார்வையும், உலக வரிசையில் அதன் முக்கிய பங்கும் உங்களால் மேலும் வலுப்படுத்தப்படும். இந்தியா அறிவுசார் மையமாக மட்டுமின்றி, திறமையின் தலைநகராகவும் மாறும் திறன் படைத்தது. இந்தியாவில் திறமையான இளைஞர்கள் உளளனர். புலம்பெயர் இந்தியர்கள் தாங்கள் குடியேறிய நாட்டின் வளர்ச்சிக்காக முக்கிய பங்கு வகித்துள்ளனர். அதுபற்றி இந்திய பல்கலைக்கழகங்கள் ஆவணங்களையும், ஒலி, ஒளிக்காட்சிகளையும் தயாரிக்க வேண்டும். ஜி 20 தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொறுப்பு. இந்தியாவை பற்றி உலகத்துக்கு சொல்ல நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று இந்தியாவின் குரலுக்கும், வார்த்தைகளுக்கும் உலக அரங்கில் மாறுபட்ட முக்கியத்துவம் உள்ளது. வளர்ந்து வரும் இந்தியாவின் சக்தி இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும். உள்நாட்டிலேயே நாம் கொரோனா தடுப்பூசி தயாரித்து 220 கோடி தடுப்பூசிகளை இலவசமாக போட்டுள்ளோம். பொருளாதாரத்தில் 5-வது இடத்தையும், அதிகமான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கொண்ட நாடுகளில் 3-வது இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது. இந்தியா என்ன செய்கிறது, எப்படி செய்கிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் ஆவலுடன் பார்க்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா அடைந்த வேகமான வளர்ச்சியும், சாதனைகளும் அசாதாரணமானவை. முன் எப்போதும் இல்லாதவை. உலகில் நடந்த மின்னணு பணப்பரிமாற்றங்களில் 40 சதவீதம் இந்தியாவில்தான் நடந்துள்ளது. அதிநவீன விண்வெளி தொழில்நுட்பம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஒரே நேரத்தில் 100 செயற்கைக்கோள்களை ஏவி சாதனை படைத்துள்ளது என தெரிவித்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!