பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ தொடங்கி கிட்டத்தட்ட 50 வருடங்களாக தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வரும் ராதிகா சரத்குமார் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தற்போது அம்மா உள்ளிட்ட முக்கிய கேரக்டர்களில் நடித்து வரும் இவர் ’தாய் கிழவி’ என்ற ஒரு படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.
தாய் கிழவி’ திரைப்படம் வரும் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ராதிகா, “ என் பெயரின் முன் உள்ள கலையரசி என்ற பட்டத்தை கருணாநிதி கொடுத்தார். அந்த பட்டத்தை என் பெயருக்கு முன்பு போடலாமா என்று நான் முதலில் தயங்கினேன். அப்போது என் கணவர் சரத்குமார் அது சாதாரண பட்டம் இல்லை… கலைஞர் கொடுத்த பட்டம்… கண்டிப்பாக போட வேண்டும் என்று சொல்லிய பிறகு தான் அதன் மதிப்பு எனக்கு முழுமையாக புரிந்தது.

நான் சினிமாவுக்கு வந்த புதுசில் ‘ எம்.ஆர். ராதா மகள்’ என்று சொல்லக்கூடாது. அந்த பெயரை பயன்படுத்தக்கூடாது என்று பல கட்டுப்பாடுகள் இருந்தது. என் தந்தையின் பெயரைக் கூட சொல்லவிடாமல் என்னை அவமானப்படுத்தியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நான் இதுவரை ராதிகா என்று மட்டும் தான் போடுவேன் என் அப்பா பெயரை போட்டதில்லை.
ஆனால், இன்று நான் மிகவும் பெருமையாக சொல்லுவேன் நான் எம்.ஆர்.ராதா மகள் என்று. பல தடைகளை கடந்து இன்று என் நடிப்பால் எனக்கென ஒரு இடம் உருவாகி இருக்கிறது. இந்த ’தாய்

கிழவி’ படத்தின் மூலம் நான் என் அப்பாவுக்கு பெருமை சேர்த்திருக்கிறேன். ‘எம்.ஆர். ராதா மகள்’ என்று நான் நிரூபித்து விட்டேன்” என்று பெருமையாக கூறினார்.

