தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி, பொங்கல் சீட் தவணை நடத்தி 375க்கும் மேற்பட்டவர்களிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக இருந்த ஏலச்சிட்டு நிறுவன அதிபர் காதலியுடன் கைது செய்யப்பட்டார். தஞ்சை காவேரி நகரில் PM அசோசியட்ஸ் என்ற பெயரில் பிரபாகரன் (44) என்பவர் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். தஞ்சை மட்டுமின்றி, திருச்சி புதுக்கோட்டை ஆகிய பகுதிகளில் தீபாவளி, பொங்கல் மற்றும் சிறுசேமிப்பு திட்டத்தின் மூலம் 1000, ரூபாய், 500 ரூபாய் போன்று மாத தவணையாக 12 மாதம் செலுத்தினால் கூடுதல் போனஸ் மற்றும் பட்டாசு தருவதாக கூறி விளம்பரம் செய்து உள்ளார்.
இதனை நம்பி 380 க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர். பிரபாகரன். கொடுத்த வாக்குறுதியின் படி தவணை காலம் முடிந்தும் பணத்தை திரும்ப தராமல் பணம் முழுவதையும் தனது நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த காதலி காயத்ரி (34) என்ற பெண் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளார். முதலீடு செய்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டது அறிந்து தஞ்சை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த நிதி நிறுவனம் அதிபர் பிரபாகரன் காதலி காயத்ரி இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.