மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் கடந்த சில தினங்களாகவே கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நவி மும்பையின் ஷாபாஸ் பகுதியில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் 3 அடுக்கு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. இந்த கட்டிட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இதுவரை 2 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வீரர்கள் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கட்டிட விபத்து குறித்து தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, “அதிகாலை 4.30 மணிக்கு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக அழைப்பு வந்தது. இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு பேர் உள்ளே சிக்கியிருக்கலாம் எனத் தெரிகிறது. அவர்களையும் மீட்பதற்கான பணிகள் நடந்து வருகின்றது” என்று தெரிவித்தார்.