Skip to content

சென்னை கடற்கரைகளில் குப்பை கொட்டினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னையின் அடையாளமாகவும், சுற்றுலாப் பயணிகளின் முக்கிய இடமாகவும் விளங்கும் மெரினா கடற்கரையைத் தூய்மையாகவும், சர்வதேச தரத்திலும் பராமரிக்கப் பெருநகர சென்னை மாநகராட்சி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில், கடற்கரையின் சுகாதாரத்தைப் பேணுவது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்த 7 நவீன இயந்திரங்கள் மற்றும் சுழற்சி முறையில் 274 தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் மூலம் நாள்தோறும் சராசரியாக 4 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படுகின்றன. இதேபோல் பெசன்ட் நகர், திருவான்மியூர், நீலாங்கரை உள்ளிட்ட இதர கடற்கரை பகுதிகளிலும் 53 பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பொதுமக்கள் குப்பைகளைத் தொட்டிகளில் போடாமல் திறந்த வெளியில் வீசுவதால் கடற்கரையின் அழகு பாதிக்கப்படுவதாக மாநகராட்சி கவலை தெரிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி, பொது இடங்களில் குப்பை கொட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. குறிப்பாகப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மெரினா மற்றும் இதர கடற்கரைகளுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நேரத்தில் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படாமல் இருக்க, பொதுமக்கள் தங்களது உணவு எச்சங்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை உரிய குப்பைத் தொட்டிகளில் மட்டுமே போட வேண்டும்.

இந்த உத்தரவை மீறி கடற்கரை மணற்பரப்பிலோ அல்லது திறந்த வெளியிலோ குப்பை கொட்டுபவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி கடுமையாக எச்சரித்துள்ளது. தூய்மையான கடற்கரை மற்றும் சுகாதாரமான சென்னை என்பதை உறுதி செய்ய பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அந்தச் செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!