டெல்லியின் நங்லோய் பகுதியில் 2004-ம் ஆண்டு 14 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்டாள். இதில், அந்த பகுதியை சேர்ந்த சிக்கந்தர் ( 60) மற்றும் அவருடைய மனைவி மஞ்சு (55) இருவருக்கும் தொடர்பு இருந்து உள்ளது. ஆனால், இருவரும் போலீசில் சிக்காமல் தப்பி வந்தனர்.
சிக்கந்தர் கூலி வேலை செய்து வருபவர். அதனால், வேலைக்காக பல ஊர்களுக்கு செல்வதுபோல் சென்றுள்ளனர். ஆனால், உண்மையில் போலீசாரிடம் சிக்காமல் தப்பிக்கவே அவர்கள் ஊர் ஊராக சென்றுள்ளனர். இதனால், 2006-ம் ஆண்டு அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்.
அவர்கள் டெல்லியில் இருந்து பீகாருக்கும் பின்னர் பீகாரில் இருந்து டெல்லிக்கும் பின்னர் மேற்கு வங்காளத்திற்கு என அடிக்கடி இடம் மாற்றி கொண்டே இருந்தனர்.
இதன்பின்னர் டெல்லி போலீசார், சிறப்பு நடவடிக்கையாக பீகாரில் முகாமிட்டு, காத்திருந்து 2 பேரையும் 21 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்துள்ளனர். சிக்கந்தர் கடந்த காலத்தில், கணேஷ் என்பவரிடம் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார்.
ஆனால், கணேஷ் பல ஆண்டுகளாக சிக்கந்தருக்கான கூலியை கொடுக்கவில்லை. இந்த ஆத்திரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் கணேஷின் 14 வயது மகளை கத்தியால் தாக்கி சிக்கந்தரும், மஞ்சுவும் கொலை செய்து விட்டு தப்பினர். பல ஆண்டுகளாக தப்பி வந்த நிலையில் போலீசார் அவர்களை கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

