கரூரில் ரசிகர்களுடன் ‘மை லார்ட்’ படக்குழுவினர் கொண்டாட்டம் – இயக்குனர் ராஜு முருகன் தனது பிறந்த நாளை திரையரங்கில் கேக் வெட்டி கொண்டாடினார்.
ராஜு முருகன் இயக்கத்தில், நடிகர் சசிக்குமார், நடிகை சைத்ரா ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்துள்ள “மை லார்ட்” திரைப்படம் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இந்த திரைப்படம், அரசு ஆவணங்களில் உயிருடன் இருந்தும் ‘இறந்தவர்கள்’ என பதிவாகும் நபர்கள், தங்களது அடையாளத்தை மீட்டெடுக்கவும், தங்களுக்கு ஏற்பட்ட அநீதிக்கு நீதி கோரியும் மேற்கொள்ளும் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கரூர் நகரில் உள்ள தின்னப்பா திரையரங்கில் இந்த படத்தை பார்ப்பதற்காகவும், ரசிகர்களை நேரில் சந்திப்பதற்காகவும் நடிகர், நடிகை, இயக்குனர் உள்ளிட்ட படக்குழுவினர் வருகை தந்தனர். அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ரசிகர்களுடன் இணைந்து திரையரங்கில் படம் பார்த்து ரசித்த படக்குழுவினர், ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
மேலும்,இயக்குனர் ராஜு முருகனின் பிறந்தநாளை முன்னிட்டு, திரையரங்கில் கேக் வெட்டி ரசிகர்களுடன் இணைந்து கொண்டாடினர்.
இதற்கிடையில், படத்தை காண வந்திருந்த ரசிகர் ஒருவர், நடிகை சைத்ரா ஆச்சாரிடம் பாடல் பாடுமாறு கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்ட அவர், மைக்கை எடுத்துக் கொண்டு பாடல் பாடியதன் மூலம் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சசிகுமார் கூறுகையில்:
விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் அதனைப் பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு எல்லா இடத்திலும் இதே கேள்விதான் கேட்கிறீர்கள்? அதனைப் பற்றி நான் அனைத்து இடங்களிலும் கூறியுள்ளேன் என் படத்தை பற்றி மட்டும் கேளுங்கள் கூறினார்.

