இந்திய வரலாற்றில் ஒரு துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்திருப்பது இதுவே முதல்முறை. (இதற்கு முன் விவி கிரி, ஜனாதிபதி ஆவதற்காக துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்தார்) அதுவும் ராஜினாமாவுக்கு ஜெகதீப் தன்கர் கூறியிருக்கும் காரணத்தை சாதாரண சாமான்ய மக்கள் கூட ஏற்கவில்லை.
இந்திய அரசியலில் பரபரப்புக்கு உரியவர் ஜெகதீப் தன்கர், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். வழக்கறிஞர்.ராஜஸ்தானில் வழக்கறிஞர் சங்க தலைவராக இருந்தவர் ஆரம்பத்தில் காங்கிரசில் இருந்தார். பின்னர் ஜனாதா தளம், அதன் பிறகு பாரதிய ஜனதா என பல கட்சிகளில் பணியாற்றி உள்ளார். மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். உச்சநீதிமன்றத்திலும் வழக்கறிஞராக பணியாற்றியவர்.
பாரதிய ஜனதாவில் சேர்ந்த இவருக்கு 2019ல் மேற்கு வங்க கவர்னர் பதவி தரப்பட்டது. அப்போது தீவிர பாஜக உறுப்பினர் போல மம்தாவிடம் தினமும் பிரச்னை செய்து வந்தார் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர். 2022ல் துணை ஜனாதிபதி ஆனார்.
ராஜ்ய சபாவிலும் இவர் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட்டு வந்தார். மாநிலங்களவை தலைவர் என்ற பொறுப்பில், இவர் அங்கு அனைத்து கட்சித்தலைவர்களுடனும் அனுசரணையாகவே இருந்தார். இதுவே பாஜகவுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த 13 நாட்களுக்கு முன், டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற தன்கர், ‘2027 ஆகஸ்ட் வரை துணை ஜனாதிபதி பதவியில் தொடர்வேன்’ என கூறினார். ஆனால் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு எப்படி வந்தது?
துணை ஜனாதிபதி பதவியில் இருக்கும் ஒருவருக்கு உச்சபட்ச உயர்தர மருத்துவ வசதிகள் தாரளமாக கிடைக்கும் நிலையில் அவர் ஏன் பதவியை ராஜினாமா செய்து விட்டு உடல்நலத்தை கவனிக்க வேண்டும்?
நாடாளுமன்ற மழைகால கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அன்று தான் தன்கருக்கு உயர்மட்ட தலைவர்களிடம் இருந்து நெருக்கடிகள் அதிகமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தான் தன்கர் கூட்டிய அலுவல் ஆய்வுக்குழுவில் பாஜக தலைவர் நட்டா, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணித்தனர். இது குறித்து தன்கருக்கும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை.
தனக்கு பல முனைகளில் இருந்தும் தாக்குதல்கள் சிலரால் தொடுக்கப்படுகிறது என்பதை அப்போது அவர் முழுவதுமாக உணர்ந்து விட்டார். இனி இந்த பதவி வேண்டாம் என முடிவெடுத்த தன்கர், நெருக்கடியாளர்கள் விருப்பப்படி பதவி விலகினார் என டில்லி வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தன்கர் பதவி விலகும்படி நெருக்கடி கொடுக்க பல காரணங்கள் கூறப்பட்டாலும், அதில் சில முக்கியமான காரணங்கள் உள்ளன.
பீகார் மாநிலத்தில் அக்டோபர், நவம்பரில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. தொடர்ந்து 2 முறை பாஜக, நிதிஷ் கூட்டணி தான் அங்கு ஆட்சி செய்கிறது. ஆனாலும் அங்கு எந்தவிதமான வளர்ச்சியும் இல்லை. மக்கள் அன்றாட பிழைப்புக்கு வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லும் அவலநிலை காணப்படுகிறது.
எனவே இந்த தேர்தலிலும் நிதிஷ்குமார் முதல்வர் என கூறி ஓட்டு கேட்க முடியாது என்பது பாஜகவுக்கு தெரிந்தது. அதே நேரத்தில் நிதிஷ்குமாரை அரசியலில் இருந்து ஓரம் கட்ட முடியாது. அவரை விலக்கி விட்டு ஓட்டு கேட்டாலும் பாஜகவுக்கு சிக்கல் தான்.
எனவே நிதிஷ்குமாரை துணை ஜனாதிபதி ஆக்கிவிடலாம் என கூறி சரிக்கட்டி உள்ளனர். அவரும் அதற்கு இசைந்து விட்டார். எனவே தன்கரை அங்கிருந்து அகற்ற வேண்டும் என , அதற்கான வேலைகளை செய்ததாகவும் கூறப்படுகிறது.
திங்கட்கிழமை அலுவல் ஆய்வுக் கூட்டம் முடிந்த பின், மிக முக்கியமான நபரிடம் இருந்து , தன்கருக்கு போன் வந்ததாக தெரிகிறது. அதில் பேசிய நபர் பதவி விலகும்படி கூறியதாகவும், அப்போது நடந்த உரையாடல், காரசாரமாக இருந்ததாகவும் பேசப்படுகிறது.இத்தனை நெருக்கடிகளுக்கு மத்தியில் தான், பதவி வேண்டாம் என்று தன்கர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.
துணை ஜனாதிபதி ராஜினாமா செய்தால் அடுத்த 60 நாட்களுக்குள் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய வேண்டும் என்பது விதி. வரும் ஆகஸ்ட் மாதம் 21ம் தேதி வரை மழைகால கூட்டத்தொடர் நடைபெறும். அதற்குள் புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்து விட பாஜக திட்டமிட்டு உள்ளது. எனவே பீகார் தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன் நிதிஷ் டில்லிக்கு இடம் பெயர்வார் என்பது உறுதி.