Skip to content
Home » போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்..

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்..

  • by Senthil

உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில், இந்தியாவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி ரூ.2,000 கோடி வரை வருமானம் ஈட்டியது தொடர்பான வழக்கில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் டில்லியில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இதற்கு மூளையாக செயல்பட்டது தமிழகத்தை சேர்ந்த ஜாபர் சாதிக் என்பது தெரியவந்தது. சினிமா தயாரிப்பாளரான இவர், சென்னை மேற்கு மாவட்ட திமுகஅயலக அணி துணை அமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து அவர் நீக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த அவர் கடந்த மாதம் 9-ம் தேதி ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை போலீஸார் காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது முக்கிய கூட்டாளியான திருச்சியை சேர்ந்த சதா என்ற சதானந்தம் (50) சென்னையில் கைது செய்யப்பட்டார். போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக, அவர்கள் தொடர்புடைய 2 குடோன்களில் அடுத்தடுத்து சோதனை நடத்தப்பட்டது.  இந்தநிலையில் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தமிழ்திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர், டில்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவுஅலுவலகத்தில் ஏப்ரல் 2-ம் தேதி (நாளை) நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல, ஜாபர் சாதிக்கின் தொழில் பங்குதாரர்களான அப்துல் பாசித் புகாரி, சையத் இப்ராஹிம் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப் பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக் தலைமறைவானபோதே, இயக்குநர் அமீரின் பெயர் அடிபடத் தொடங்கியது. கிழக்கு கடற்கரை சாலையில்அமீர் நடத்தி வரும் உணவகத்தில் ஜாபர் சாதிக்கும் பங்குதாரர் என்று கூறப்பட்டு வந்த நிலையில், ‘‘போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் தொடர்புடையவர் ஜாபர் சாதிக் என்று எனக்கு தெரியாது. நான் போதை பழக்கங்களுக்கு எதிரான கொள்கை உடையவன்’’ என்று இயக்குநர் அமீர் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும், இதுதொடர்பாக விசாரணைகளுக்கு ஆஜராகி உரிய விளக்கம் அளிப்பேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார். ஜாபர் சாதிக்கின் தயாரிப்பில் ‘இறைவன் மிகப் பெரியவன்’ என்ற படத்தை அமீர் இயக்கி உள்ளார். மேலும், சென்னை புரசைவாக்கத்தில் ஒரு நிறுவனத்தை ஜாபர் சாதிக் கடந்த 2021- ஆண்டு தொடங்கி இருந்தார். இந்த நிறுவனத்தின் பங்குதாரராக அமீர், அப்துல் பாசித் புகாரி உள்ளனர். அதேபோல, வேறொரு தொழிலில் ஜாபர் சாதிக்குடன் இணைந்து செயல்பட்டு வந்தவர் சையத் இப்ராஹிம் என்று கூறப்படுகிறது. அந்த அடிப்படையிலேயே அமீர் உள்ளிட்ட 3 பேருக்கும் மத்திய போதைப் பொருள்தடுப்பு போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!