Skip to content

உங்கள் அனுமதியின்றி ஆதார் கார்டை யாரும் பயன்படுத்த முடியாது: பாதுகாப்பை உறுதி செய்யும் ‘ஆதார் லாக்’ வசதி

இன்றைய காலகட்டத்தில், 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் கார்டு என்பது தவிர்க்க முடியாத மிக முக்கியமான அடையாள ஆவணமாக மாறியுள்ளது. குழந்தைகளின் பள்ளிச் சேர்க்கை முதல் முதியோர் உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் எண் முதன்மையான தேவையாக உள்ளது. இதில் ஒருவரின் பெயர், முகவரி போன்ற விவரங்களுடன் கைரேகை மற்றும் கண் கருவிழி உள்ளிட்ட பயோமெட்ரிக் தகவல்களும் இடம்பெற்றுள்ளன.

இத்தகைய ரகசியத் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தவிர்க்க, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ‘ஆதார் லாக்’ (Aadhaar Lock) என்ற சிறப்பான பாதுகாப்பு வசதியை வழங்கியுள்ளது. இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் ஆதார் தகவல்களை எப்போது, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை நீங்களே முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும். உங்கள் ஆதார் எண் லாக் செய்யப்பட்டிருந்தால், பயோமெட்ரிக் சரிபார்ப்பு அல்லது ஓடிபி (OTP) அடிப்படையிலான எந்தவொரு சேவையையும் உங்கள் அனுமதியின்றி யாராலும் அணுக முடியாது.

ஆதார் லாக் செய்யப்பட்டிருக்கும் நிலையில், அடையாளச் சான்று தேவைப்படும் இடங்களுக்கு ‘விர்சுவல் ஐடி’ (Virtual ID) எனப்படும் 16 இலக்கத் தற்காலிக எண்ணைப் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆதாரைப் பாதுகாப்பாக லாக் செய்ய, அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள ‘எனது ஆதார்’ (My Aadhaar) பகுதிக்குச் சென்று, ‘ஆதார் லாக் / அன்லாக்’ என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கு ‘UID லாக்’ என்பதைத் தேர்ந்தெடுத்து, ஆதார் எண், பெயர் மற்றும் பின்கோடு விவரங்களைப் பதிவிட்டு, மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபி மூலம் லாக் செய்துகொள்ளலாம். மீண்டும் தேவைப்படும்போது அதே முறையில் அன்லாக் செய்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

error: Content is protected !!