Skip to content

வட்டாட்சியரை கடித்து குதறிய தெருநாய்…அதிகாரிகளுக்கு நோட்டீஸ்…

  • by Authour

சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகளவில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. தெருநாய்களால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், தெருநாய் கடியால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில், சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வட்டாட்சியரை தெருநாய் துரத்திச் சென்று கடித்துள்ளது.

இதில், காயமடைந்த வட்டாட்சியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை அறிந்த மாவட்ட கலெக்டர் பொற்கொடி உடனடியாக நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நகராட்சி ஆணையரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால், அவர் தொலைபேசியை எடுக்காததால், அவரே நேரடியாக சென்று தெருக்களில் நிலவும் தெருநாய்கள் பிரச்சினை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இதைத் தொடர்ந்து, தெருநாய்கள் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை ஏன் எடுக்ககூடாது? எனக் கேட்டு நகராட்சி ஆணையர், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் ஆகியோருக்கு மாவட்ட கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என கலெக்டர் அந்த நோட்டீசில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!