பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சாலை மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. காலமுறை ஊதியம் வழங்க

வேண்டும், ஐந்தாண்டு பணி முடிந்த சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் 9000 ரூபாய் வழங்க வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தை சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு அவர்களது கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து காலவரையற்ற போராட்டம் அறிவித்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
இது குறித்து பேட்டியளித்த கோவை மாவட்ட செயலாளர் லதா, தங்கள் போரட்டம் 4 நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்குள் முதல்வர் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் மாநில தலைமை முடிவின்படி அடுத்த கட்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.

