தஞ்சாவூர் ரெட்டிப்பாளையம் ரோடு ஆனந்தம் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). இவரது மனைவி ரஞ்சிதம் (45). இவர்கள் இருவரும் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை அருகே பெட்டி கடை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இவரது கடைக்கு சில நாட்களாக மூதாட்டி ஒருவர் வந்து ரஞ்சிதத்திடம் பேச்சுகொடுத்து பழகினார். இதையடுத்து கடந்த 11 -ம் தேதி ரஞ்சிதமும், மூதாட்டியும் ஆட்டோவில் மதியம் வீட்டுக்கு சென்றனர். வீட்டுக்கு சென்ற ரஞ்சிதத்துக்கு தண்ணீரில் தூக்கமாத்திரையை கரைத்து கொடுத்து அவர் மயங்கியதும், அவர் அணிந்திருந்த தோடு, சங்கிலி என 7 பவுன் நகையை திருடிக் கொண்டு அந்த மூதாட்சி தப்பிச் சென்றார்.
பின்னர் ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றதும், ரஞ்சிதம் மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதைத் தொடர்ந்து 12-ம்தேதி தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ராஜேந்திரன். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தேசிகன் தலைமையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவு மற்றும் வீட்டில் பதிவான கைரேகை ஆகியவற்றை கொண்டு மூதாட்டியை தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த மூதாட்டியை பிடித்து போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர் திருச்சி காந்திமார்கெட், உப்புபாறை பிள்ளைமான் தெருவைச் சேர்ந்த செபஸ்தியான் மனைவி சுப்புலட்சுமி(60) என்பது தெரியவந்தது. பின்னர் சுப்புலட்சுமியிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ரஞ்சிதத்திடம் நகை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் அவர் 7 பவுன் நகை வைத்திருந்ததை போலீஸார் மீட்டு, கைது செய்தனர்.
சுப்புலட்சுமி கடந்த 2003 ம் ஆண்டு திருச்சி பாலக்கரை காவல் நிலைய பகுதியில் நகை திருடி போலீஸாரால் கைது செய்யப்பட்டு 7 மாத சிறை தண்டனை பெற்றார். பின்னர் வெளிய வந்த சுப்புலட்சுமி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நகைகளை பெண்களிடம் திருடி வந்துள்ளார். ஆனால் போலீஸாரிடம் சிக்காமல் இருந்துள்ளார். தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் போலீஸார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சுப்புலட்சுமி மீது பல்வேறு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில் இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

