Skip to content

OLX-ல் காரை விற்றுவிட்டு பின்னாலேயே வந்த கொள்ளையர்கள்..

கோவை: கோவையில் பென்ஸ் கார் ஒன்று திருடு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காரை திருடிச்செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கவுண்டர் மில்ஸ் பகுதியில் கார் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். மேலும் பழைய கார்களை வாங்கி விற்பனையும் செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.

இதனிடையே பென்ஸ் கார் ஒன்று OLX-ல் விற்பனைக்கு வந்துள்ளது. அந்த கார் திருநெல்வேலியில் இருந்தது. தொடர்ந்து அங்கு சென்ற ஜெயக்குமார், ஜெகன் என்பவரிடம் ரூ.5.65 லட்சம் பணத்தைக் கொடுத்துவிட்டு அந்த காரை வாங்கினார்.

அப்போது காருக்கு இரண்டு சாவிக்கு பதிலாக ஒரு சாவியை மட்டுமே ஜெகன் கொடுத்துள்ளார். மற்றொரு சாவி தொலைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த காரை எடுத்துக்கொண்டு ஜெயக்குமார் கோவை வந்தார். பின்னர் காரை தனது வீட்டு வாசலை நிறுத்திவிட்டு சென்றுவிட்டார். இரவு நேரத்தில் அங்கு மற்றொரு காரில் வந்த நபர்கள் அந்த பென்ஸ் காரை திருடி விட்டுச் சென்றனர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது

இந்த காட்சிகளின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ஜெயக்குமார் புகார் அளித்துள்ளார். தற்போது அந்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

error: Content is protected !!