Skip to content

ஆம்னி பஸ் டிரைவர்…கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்…

குமரி மாவட்டம் தக்கலை பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவரின் 21 வயதான மகள், கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 4 மாதத்திற்கு முன்பு அந்த மாணவி கல்லூரி செல்வதற்காக தனது தாயுடன் ஆம்னி பஸ் ஒன்றில் கோவைக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த பஸ்சில் களியக்காவிளை பகுதியை சேர்ந்த அனீஷ் ( 36) என்பவர் டிரைவராக இருந்துள்ளார். அவர் கோவை சென்ற தாய் மகள் இருவரிடமும் பாசமாக பேசி எந்த உதவி வேண்டுமானாலும் கேளுங்கள் என்று பஸ் நிறுத்தப்பட்ட இடங்களில் கூறி இருக்கிறார்.

மேலும் மாணவியின் தாயிடம், மாணவி எனக்கு மகளை போன்றவர். கல்லூரிக்கு செல்ல நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டாம். நானே உதவுகிறேன் என்று மிகவும் அக்கரையாகவும் பேசி உள்ளார். அவரது பேச்சை உண்மை என்று நம்பிய மாணவி, கோவையில் இருந்து ஊருக்கு வரும்போதெல்லாம் அனீஷ் டிரைவராக வந்த பஸ்சிலேயே பயணித்துள்ளார். இந்தநிலையில் கடந்த மாதம் 9-ம் தேதியும் அனீஷ் ஓட்டிய கோவையில் இருந்து களியக்காவிளை வந்த ஆம்னி பஸ்சில் தக்கலைக்கு வந்துள்ளார். ஸ்லீப்பர் வசதி கொண்ட அந்த பஸ்சில் மாணவி தூங்கியபடியே வந்துள்ளார். அப்போது டிரைவர் அனீஷ் மாணவியை தட்டி எழுப்பி பசித்தால் சாப்பிடுமாறு பிஸ்கெட் பாக்கெட்டை கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட மாணவிக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. மறுநாள் காலையில் ஊருக்கு பஸ் வந்து சேர்ந்ததும் டிரைவர் தனக்கு மயக்க பிஸ்கெட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததை மாணவி அறிந்தார். அதுபற்றி தனது தாயிடம் கூறுவேன் என்று கூறி இருக்கிறார். அவ்வாறு கூறினால் கொன்றுவிடுவேன் என்று கத்தியை காட்டி மாணவியை டிரைவர் அனீஷ் மிரட்டி உள்ளார். மேலும் உன்னையும் குடும்பத்தில் உள்ளவர்களையும் கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து வைத்து இருக்கிறேன் எனவும் கூறி இருக்கிறார். இதனால் பயந்துபோன அந்த மாணவி, அந்த சம்பவம் பற்றி தனது தாய் உள்ளிட்ட யாரிடமும் கூறவில்லை. அதனை பயன்படுத்திக்கொண்டு டிரைவர் அனீஷ், தனியாக பேச வேண்டும் என்று அழைத்து மாணவியை இரண்டு முறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதனை வீடியோ எடுத்து மாணவிக்கு தொடர்ந்துகொலை மிரட்டல் விடுத்தப்படி இருந்துள்ளார். இதனால் பயந்துபோன மாணவி நடந்த சம்பவங்களை தனது தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், மயக்க பிஸ்கெட் கொடுத்து தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி தொடர்ந்து மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய ஆம்னி பஸ் டிரைவர் அனீஷ் மீது மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆம்னி பஸ்சில் மயக்க பிஸ்கெட் கொடுத்து கல்லூரி மாணவியை பால்யல் பலாத்காரம் செய்த அனீசை கைது செய்தனர். விசாரணைக்கு பிறகு அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். டிரைவர் அனீசுக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!