கும்பகோணத்தில் இருந்து நேற்று இரவு 31 பேருடன் ஆம்னி பஸ் ஒன்று பெங்களூரு நோக்கி புறப்பட்டது. இந்த நிலையில் இன்று அதிகாலையில் திருச்சி மாவட்டம் சிலையாத்தி அருகே திருச்சி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை ஓரத்தில் இருந்த அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 21 பயணிகள் படுகாயம் அடைந்தனர். பேருந்தில் சிக்கிய பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்த இளைஞர்கள் ஓடிவந்து பேருந்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாத்தலை போலீசார், இளைஞர்களின் உதவியுடன் பேருந்தில் பயணித்த 31 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

