தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த வக்கீல்கள், சட்டக்கல்லூரி மாணவர்களை போலீசார் சட்ட விரோதமாக கைது செய்து, அடித்து உதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமிநாராயணன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச், “தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வக்கீல்களை போலீசார் தாக்கியது தொடர்பாக ஐகோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன் தலைமையில் ஒரு நபர் கமிஷன் அமைத்து உத்தரவிட்டனர். மேலும், நீதிபதி வி.பார்த்திபன் விசாரணையை விரைவாக முடித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும்” என்றும் அந்த உத்தரவில் கூறியிருந்தனர்.
இந்தநிலையில், ஒரு நபர் ஆணையம் அமைத்து பிறப்பித்த உத்தரவை நீக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர், பெரியமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் நிஷா பானு, சவுந்தர் அமர்வு, ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து பிறப்பித்த உத்தரவை நிறுத்தி வைக்க உத்தரவிட்டனர்.