ராமநாதபுரம், சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், கவிதா தம்பதியின் மகள், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த குப்புசாமி, முத்துமாரி தம்பதியின் மகன் முனிராஜ் (20) என்பவர் அந்த பெண்ணை கடந்த ஒரு வருடமாக ஒருதலைபட்சமாக காதலித்ததாகவும், இதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், மாணவியை பள்ளி செல்லும் வழியில் இடைமறித்த முனிராஜ், அவரது கழுத்தில் கத்தியால் குத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, மாணவி இறந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவியை கத்தியால் குத்திய முனிராஜ் அருகில் இருந்த ராமேஸ்வரம் நகர் போலீஸ் ஸ்டேசனிற்கு நேரடியாக சென்று சரண் அடைந்துள்ளார். மேலும், தன்னை காதலிக்க மறுத்ததால் மாணவியை கொலை செய்துவிட்டதாக போலீஸ் ஸ்டேசனில் வாக்குமூலம் அளித்துள்ளார். பின்னர், முனிராஜை ராமநாதபுரம் போலீஸ் ஸ்டேசனிற்கு விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றுள்ளனர்.
காதலிக்க மறுத்ததால் பள்ளிக்கு சென்ற மாணவியை வழியில் இடைமறித்து வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

