Skip to content

ஆன்லைன் முதலீடு என ஆசை வார்த்தை: தனியார் ஊழியரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க தனியார் நிறுவன ஊழியர் ஒருவரிடம், ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் மர்ம நபர்கள் ரூ.20 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவரது செல்போன் எண்ணை ‘வி.ஐ.பி. ஸ்ட்ரேடஜி’ என்ற வாட்ஸ்-அப் குழுவில் மர்ம நபர் ஒருவர் இணைத்துள்ளார். அந்தக் குழுவில் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் ஈட்டலாம் எனப் பல ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் அவர் சிறிய தொகையை முதலீடு செய்தபோது, அதற்குப் பிரதிபலனாகக் கூடுதல் லாபம் கிடைத்துள்ளது. இதனை உண்மை என நம்பிய அவர், மர்ம நபர்கள் குறிப்பிட்ட பல்வேறு வங்கி கணக்குகளுக்குப் பல தவணைகளாக மொத்தம் ரூ.20 லட்சத்து 17 ஆயிரத்து 459-ஐ அனுப்பி வைத்துள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு அந்த நபர்களிடம் இருந்து எந்தத் தகவலும் வரவில்லை. மேலும், அவரைத் தொடர்பு கொண்ட எண்களும் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டிருந்தன.

தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், இதுகுறித்து கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோசடி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பொதுமக்கள் அடையாளம் தெரியாத வாட்ஸ்-அப் குழுக்களில் வரும் முதலீடு தொடர்பான அறிவிப்புகளை நம்பிப் பணத்தை இழக்க வேண்டாம் எனப் போலீசார் எச்சரித்துள்ளனர்.

error: Content is protected !!