தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி பேச்சுகள், தொகுதிப் பங்கீடு உடன்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்தநிலையில் தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது X-தளப்பதிவில் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது..
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே?.. தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
“#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்” என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக ‘இன்ச் இன்ச்’சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழைத்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்! என்று இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

