வௌியூரில் இருந்து பின் இரவு வேளையில் திருச்சி திரும்பிய நாம் 3 மணி ஆகி விட்டதால், ஒரு பால் டீ குடித்து விட்டு வீட்டிற்கு செல்லலாம் என்று ஒரு டீ கடை பக்கத்தில் ஒதுக்கினோம். அதே நேரத்தில் இரவு பணி பார்த்த களைப்பில் டீ குடிக்க இரவு பணி சிட்டி போலீசாரும் ஒதுங்கினர். டீக்காக காத்திருந்த வேளையில் அந்த போலீசாரின் வாக்கி டாக் அதிர்ந்தது. உயர் அதிகாரி ஒருவரின் பேச்சு என்பதால் அங்கிருந்து போலீசார் உன்னிப்பாக கேட்ட தொடங்கினோம். அங்கு நின்று கொண்டிருந்த நாமும் காதை தீட்டி கேட்ட ஆரம்பித்தோம்…..
அதிகாரி: என்ன எஸ்ஐ காமராஜ் நீ நைட் டூட்டியில் இருந்தாலே செயின்பறிப்பு, செல்போன் பறிப்பு சம்பவம் நடக்கிறதே….
எஸ்ஐ : இல்லை சார்….உடனே சிசிடிவி கேமிரா புட்டேஜ்களை செக் பண்ணிகிட்டு இருக்கேன் சார்….
அதிகாரி: அது சரி… நீயே 4 பேர அனுப்பி திருட சொல்லிருப்ப போல….
எஸ்ஐ: அப்படியெல்லாம் இல்லைங்க. சிசிடிவி கேமிரா செக் பண்ணிகிட்டு இருக்கேன்…. எப்படியும் தொிந்து விடும்
உரையாடல் அத்தோடு முடிய டீ கடையில் நின்றிருந்த போலீசார் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு உதட்டை பிதுக்கி கொண்டனர்.
ஒரு நான்கு நிமிடம் கழித்து மீண்டும் மைக் அலறியது….
அதிகாரி: என்ன…. சிசிடிவி கேமிராவெல்லாம் பாத்தாச்சா…. நீ அனுப்புன ஆள் தான…அடிச்சதுல உனக்கு கரெக்டா பிரிச்சு கொடுத்துருவாங்கல்ல…
எஸ்ஐ: சார்…. இல்லைங்கசார்….
அதிகாரி: அடுத்த வழிபறிக்கு 4 பேர ரெடி பண்ணீட்டியா
என்று தொடர்ந்து வறுத்தெடுக்க டீக்கடையில் கேட்டுக்கொண்டிருந்த போலீசாரின் முகம் மாறியது. வழிபறி நடந்துருச்சு…. திருடர்களை அடையாளம் காணும் நடவடிக்கையிலும் விறுவிறுவென்று அந்த எஸ்ஐ இறங்கிட்டாரு…. அதுக்கப்புறமும் திருடர்களோடு தொடர்புல இருக்கியான்னு எஸ்ஐயை அவமானப்படுத்தி…. இப்படியா ஓபன் மைக்குல திட்டுறது….என்று புலம்பியபடி டீயை மறந்து நடையை கட்டினர். இந்த பேச்சு திருச்சி மாநகரில் இரவு பணியில் இருந்த அனைத்து போலீசாரையுமே வெறுப்படைய வைத்துள்ளதாம்.
விசாரித்ததில்…. தில்லைநகர் 7வது கிராஸ் மூவேந்தர் நகரை சேர்ந்த 66 வயது பெரியசாமி என்கிற முதியவர் வௌியூரில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வந்தடைந்துள்ளார். அதன் பின்னர் அவர் நடந்தே சென்று கொண்டிருந்த போது திருச்சி கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே ஒரே இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் அவரை நள்ளிரவு 2.30 மணிக்கு வழிமறித்து செல்போனை பறித்து சென்றுள்ளனர். தகவல் கிடைத்ததும் ஜிஎச் போலீசார் விறுவிறுவென விசாரணையை தொடங்கி உள்ளனர். அதற்கு இடையே தான் மேற்கண்ட உரையாடல் நடந்துள்ளது என்று தொிகிறது.