அதிமுக முன்னாள் அமைச்சர்களோடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் ஆலோசனை மேற்கொண்டார். பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு நேற்று மரியாதை செலுத்துவதற்காக டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகிய மூவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே காரில் வந்து மரியாதை செலுத்தி விட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. இதை அடுத்து இன்று நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தி கொண்டிருந்தார். அந்த நேரத்தில் திடீரென அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்பி உதயகுமார், கடம்பூர் ராஜு இருவரும் அலுவலகத்திற்கு வந்து அவருடன் சேர்ந்து சர்தார் வல்லபாய் பட்டேல் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினர். இதை எடுத்து பாஜக மாநில தலைவர் மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, ஆர் பி உதயகுமார் ஆகிய அனைவரும் சேர்ந்து பாஜக மாவட்ட அலுவலகத்தில் அரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை செய்தனர்.
இந்த ஆலோசனையில் நேற்று பசும்பொன்னில்  ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் இணைந்து வந்தது குறித்தும் அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைக்கலாமா அல்லது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைக்கலாமா, கட்சி சார்பாக செங்கோட்டை மீது ஏதும் நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து விவாதித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டம் அரசியல் விமர்சகர்கள், தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரை மணி நேரத்திற்கு பிறகு ஆலோசனைக் கூட்டம் முடிந்து மூவரும் வெளியே வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “திருமண விழா குறித்து நேரடியாக பாஜக மாநில தலைவர் சந்தித்து அழைப்பு விடுத்தோம். டிடிவி தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகிய மூன்று பேரும் சந்தித்தது அதிமுகவிற்கு எந்த பாதிப்பையும் ஏற்படாது. அவர்கள் 3 பேரும் சந்தித்தது ஒரு நாள் பரபரப்பு அவ்வளவுதான். தமிழ்நாடு இளைஞர்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில், திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகத் துறை பணி நியமனத்தில் முறைகேடு நடந்திருக்கிறது” என்று கூறினார்.

