Skip to content

நாளை எல்லாம் தெரிவிப்பேன்- ஓபிஎஸ் ஏற்படுத்திய பரபரப்பு

முன்னாள்  துணை  முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்,   அதிமுகவில் இருந்து  நீக்கப்பட்டதை தொடர்ந்து   பாஜக ஆதரவுடன் தனி அணியாக செயல்பட்டு வந்தார். பாஜக எப்படியும் தன்னை  கைவிடாது என நம்பி இருந்தார். சட்டமன்ற தேர்தலின்போது  அதிமுகவில் எப்படியாவது சீட்  வாங்கி தந்து விடுவார்கள் என  நினைத்தார்.  இந்த நிலையில்  அவரை  பாஜக கண்டுகொள்ளவில்லை.

கடந்த வாரம்  தூத்துக்குடி, திருச்சி வந்த பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு ஓபிஎஸ் கடிதம் எழுதினார். அதற்கு கூட அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவர்  அப்செட் ஆனார்.  கடந்த 4 வருடங்களாக பாஜகவை நம்பி மோசம் போய்விட்டோமோ என்ற விரக்தியில் இப்போது அவர் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறார்.

அவரது முக்கிய ஆதரவாளராக கருதப்படும் மூத்த அரசியல்வாதி பண்ருட்டி ராமச்சந்திரனும் பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததுடன்,  ஓபிஎஸ் விஜயுடன் சேரவேண்டும் என்ற தொனியில் பேட்டி கொடுத்தார். எனவே ஓபிஎஸ் பாஜகவை நிரந்தரமாக கைகழுவி விட்டு, விஜயுடன்  கூட்டணி சேர பேசி வருவதாகவும், இதற்காக புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும்  கூறப்படுகிறது.

நடிகர் விஜயும் தங்களுடன் யார் வந்தாலும் ஆட்சியில் பங்கு என கூறிய நிலையில் இன்னும்  அவரது கட்சியும், அழைப்பும் போணியாகவில்லை.  ஒரு கட்சி கூட  விஜய் பக்கம் வரவில்லை. இந்த நிலையில் ஓபிஎஸ் வந்தால் வரவேற்க விஜய் கட்சியும் தயாராகி வருகிறது. அதே நேரத்தில் விஜய், எடப்பாடியுடன் கூட்டணி சேரவே முயற்சி செய்தார். ஓபிஎஸ்சை  தன் பக்கம் இழுத்தால் எடப்பாடி வர வாய்ப்பு இல்லை என்பதால் என்ன செய்வது என்ற கேள்வியும் அவரிடம் உள்ளது.

ஒபிஎஸ்சின் நிலை என்ன என்பது குறித்து  இன்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பத்திரிகையாளர்கள்  ஓபிஎஸ்சிடம் கேட்டனர். அதற்கு அவர் நாளை சென்னையில்  எல்லாம் தெரிவிப்பேன் என்று கூறி சென்று விட்டார்.  நாளை  அவர் புதிய கட்சி தொடங்கப்போவதாக கூறுவாரா அல்லது  விஜய் கூட்டணி குறித்து கூறுவாரா, அல்லது  அமைச்சர் ஐ பெரியசாமி கூறியது போல, ஓபிஎஸ் திமுகவில் இணைவார் என்பதை  உறுதி செய்யப்போகிறாரா என்பதை  பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஓபிஎஸ்  என்ன அறிவிக்க போகிறார் என்பது தமிழக அரசியலில் இப்போது பேசுபொருளாகி உள்ளது.

error: Content is protected !!