திருச்சி, பஞ்சப்பூரில் ரூ. 408 கோடியில் புதிய பஸ்நிலையம் கட்டி முடிக்கப்பட்டு நேற்று திறக்கப்பட்டது. இந்த பஸ்நிலையத்தில் இருந்து அனைத்து பஸ்களும் எப்போது முதல் இயக்கப்படும் என கலெக்டர் பிரதீப் குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த கலைஞர் பேருந்து முனையத்தில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடம், நேரம் ஒதுக்குதல் தொடர்பாக போக்குவரத்துத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், மாவட்ட நிர்வாகம் இணைந்து ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது.
மேலும், பேருந்து முனையம் குறித்து அரசிதழில் வெளியிட வேண்டியுள்ளது. சில நிர்வாக காரணங்களுக்காக 15 நாட்களுக்கு மேல் தேவைப்படுகிறது. பேருந்து முனையம் செயல்பாட்டுக்கு வருவதற்கு 3 தினங்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு முறைப்படி அறிவிப்பு வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் கூறினார். அதனால், அடுத்த மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.