சென்னையில் சித்த மருத்துவராக இருப்பவர் டாக்டர் கவுரி(26), இவரது கணவர் பாலபிரபு(28), இவர்களது மகள் கவிகா(3), கவுரியின் தந்தை கந்தசாமி(53). இவர்கள் 4 பேரும் கன்னியாகுமரி மாவட்டம் , அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரக்குடி தெற்கு கிரிவளை என்ற கிராமத்தில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். பாலபிரபுவின் சொந்த ஊர் கிரிவளை.
காரை பாலபிரபு ஓட்டினார். இன்று காலை 8 மணிக்கு கார் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே உள்ள பூமாலை ஆஞ்சநேயர் கோவில் அருகே வந்து கொண்டிருந்தது. கார் ஓட்டிய பாலபிரபு கண்அயர்ந்து விட்டதாக தெரிகிறது.
இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறக ஓடி ரோட்டோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் கார் ஓட்டிய பாலபிரபு, கந்தசாமி ஆகியோர் அந்த இடத்திலேயே இறந்தனர். பின் சீட்டில் இருந்த குழந்தை கவிகா பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. டாக்டர் கவுரி லேசான காயங்களுடன் தப்பினார்.
உடனடியாக பாடாலூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, குழந்தை கவிகாவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சில் ஏற்றினர். அப்போது குழந்தை இறந்தது. டாக்டர் கவுரி மட்டும் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சோ்க்கப்பட்டு உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.