கரூர் மாவட்டம், கடவூர் அடுத்த முத்தக்கவுண்டன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கோவையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் யோகப் ப்ரியா (வயது 24) என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணமான நிலையில், கருவுற்று இருந்தார். அவரது கிராமத்திற்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் முறையாக சோதனை சென்று வந்த நிலையில், கடந்த 2ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதால் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு பனிக்குடம் உடைந்து விட்டதால் அறுவை சிகிச்சை செய்தாவது குழந்தையை எடுக்கும்படி பெற்றோர் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களிடம் முறையிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், உறவினர்களை திட்டிய செவிலியர்கள் நார்மல் டெலிவரிக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி அப்பெண்ணிற்கு ஆப்ரேஷன் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த சில மணி நேரத்திற்குப் பிறகும் இரத்த ஓட்டம் நிற்காததால் கற்பபையை அறுவை சிகிச்சை மூலம் நீக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும், அதனை தொடர்ந்து கற்பபை அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்ட நிலையிலும் ரத்தப் போக்கு நிற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் யோகப் ப்ரியா உயிரிழந்து விட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சவக்கிடக்கில் வைக்கப்பட்டுள்ளது. தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள் தங்களுடைய மகளுக்கு பயிற்சி மருத்துவர்கள் மூலம் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறி கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பாக பசுபதிபாளையம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.