பிரதமர் மோடி நாளை (புதன்கிழமை) இங்கிலாந்து, மாலத்தீவு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 23, 24-ந்தேதிகளில் இங்கிலாந்திலும், 25, 26-ந்தேதிகளில்மாலத்தீவிலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். மாலத்தீவு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் பிரதமர் மோடி 26-ந்தேதி (சனிக்கிழமை) இரவு அங்கிருந்து இந்தியா புறப்படுகிறார்.
மாலத்தீவில் இருந்து நேரடியாக பிரதமர் தூத்துக்குடிக்கு வருகிறார். 2 நாள் பயணமாக தமிழகம் வரும் பிரதமர் மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்
தூத்துக்குடி விமான நிலைய பகுதியில் பிரதமர் மோடிக்கு பா.ஜ.க. சார்பில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன் பிறகு அவர் புதிதாக கட்டப்பட்டு உள்ள விமான நிலைய பகுதிக்கு செல்கிறார். தூத்துக்குடியில் ரூ.380 கோடியில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு வேறு சில நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அங்கு நடக்கும் விழாவில் ரூ.2,357 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சேத்தியாதோப்பு-சோழபுரம் பகுதி நான்குவழி சாலை, ரூ.200 கோடி மதிப்பீட்டில் 6 வழிச்சாலையாக மாற்றப்பட்ட தூத்துக்குடி துறைமுக சாலை, ரூ.99 கோடி மதிப்பீட்டில்மதுரை-போடிநாயக்கனூர் இடையே 90 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் மயமாக்கப்பட்ட ரெயில் பாதை மற்றும் ரூ.650 கோடி மதிப்பீட்டில் நாகர்கோவில் டவுன்-நாகர்கோவில் சந்திப்பு-கன்னியாகுமரி ரெயில் பாதை இரட்டிப்பு ஆக்குதல் (21 கிலோ மீட்டர் தூரம்) ஆகிய முடிவுற்ற பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
தூத்துக்குடி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அன்று இரவு 9.30 மணிக்கு பிரதமர் மோடி இந்திய விமானப் படைக்கு சொந்தமான விமானம் மூலம் திருச்சிக்கு வருகிறார். அன்று இரவு அவர் திருச்சியில் தங்குகிறார். மறுநாள் (27-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை அவர் திருச்சியில் இருந்து அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டசோழபுரம் செல்கிறார். அங்கு பிரதமர் மோடி ரோடு ஷோ மேற்கொள்கிறார். ரோடு ஷோ முடிந்ததும் அவர் தமிழக பா.ஜ.க நிர்வாகிகளை சந்தித்து நலம் விசாரிப்பார்.
இதையடுத்து அவர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்பார். விழாவில் ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். பிறகு இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி இசை நிகழ்ச்சியை கண்டு களிக்கிறார். விழாவில் ஆதீனங்கள், சாதுக்களையும் பிரதமர் மோடி சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.