Skip to content

விசிகவினரின் வாகனத்தை மறித்து பாமக இளைஞர்கள் ரகளை

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே காடுவெட்டி கிராமத்தில் மறைந்த முன்னாள் ஜெயங்கொண்டம் எம்எல்ஏவும், வன்னியர் சங்க தலைவருமான குரு பிறந்தநாள் விழாவை வன்னியர் ஜெயந்தி விழாவாக மாவீரன் மஞ்சள் படையினர் வருடம் தோறும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு 65 ஆவது பிறந்தநாள் விழா குருவின் சமாதியில் கொண்டாடப்பட்டது. இதற்காக ஆயிரக்கணக்கில் மாவீரன் மஞ்சள் படை ,வன்னியர் சங்கத்தினர், ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்பு தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியினர் என ஏராளமானோர் வந்து சென்றனர் . இந்நிலையில் மீன்சுருட்டி அருகே மேலணிக்குழி என்ற கிராமத்தில் அவ்வழியாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் காரை வழிமறித்து கார் பேனட்டில் ஏறி பாமக கொடியை காட்டி ரகளை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிந்து 7 பேரிடம் விசாரித்து வந்த நிலையில் சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் (18), முள்ளுக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த பரத் (19), கஞ்சமலைப்பட்டியை சேர்ந்த கல்யாணக்குமார் (18) உள்ளிட்ட மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்கள் மூன்று பேரும் தனியார் கல்லூரியில் கேட்டரிங் படிப்பு படித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

error: Content is protected !!