சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த மாதம் 1ம் தேதி தூய்மை பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு அ.தி.மு.க., காங்கிரஸ், நா.த.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையில், தூய்மை பணியாளர்கள் போராட்டம் காரணமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி தேன்மொழி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, தூய்மை பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து தூய்மை பணியாளர்களை போலீசார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக கைது செய்து கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியேற்றினர்.
இந்த நிலையில், போராட்டம் நடத்த தூய்மை பணியாளர்கள் போலீசாரிடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்த போலீசார் அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.