சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணிபுரிந்தவர் அஜித்குமார் (29). அவரை பக்தர் நிகிதா கொடுத்த திருட்டு புகாரின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அப்போது போலீஸார் கடுமையாக தாக்கியதில் ஜூன் 28-ம் தேதி அஜித்குமார் உயிரிழந்தார். இது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு 5 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர்.
கோயில் பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் அஜித்குமாரை, தனிப்படை போலீஸார் கடுமையாக தாக்குவதை கோயில் பணியாளர்ர்களின் ஒருவரான சக்தீஸ்வரன், கழிவறையில் மறைந்திருந்து வீடியோ எடுத்தார். இதனால் அவர் நேரடி சாட்சியாக உள்ளார். வீடியோ எடுத்தவர் இன்று (வியாழக்கிழமை) தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு கேட்டு இமெயிலில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பினார்.
இதை ஏற்று அவருக்கு 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. தலா 2 போலீஸ்காரர்கள் வீதம் அவருக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என சிவகங்கை டிஐஜி மூர்த்தி தெரிவித்தார்.