என்னா குளிரு…. என்னா குளிரு…. யப்பா ஸ்ராங்கா ஒரு காபி என்று கூறியபடி வாக்கிங் முடித்து விட்டு வந்த ஸ்ரீரங்கம் பார்த்தாவும், பொன்மலை சகாயமும், சந்துகடை காஜாவும், அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தனர். நீ குளிருன்னு சொன்னதும் எனக்கு போலீஸ்காரங்கள உஷ்ணமாக்கிய விஷயம் ஒண்ணு ஞாபகத்துக்கு வருது என்று சந்துகடை காஜா தொடங்க… இருவரும் கவனிக்க தொடங்கினர். நள்ளிரவு திருச்சி கோர்ட்டுக்கு பக்கத்துல ஒரு செல்போன் பறிப்பு சம்பவம் நடந்தது. தகவல் கிடைத்தவுடன், அது சம்பந்தமான குற்றவாளிகள பிடிக்க பெரிய தலைவர் பெயரை கொண்ட எஸ்ஐ, உடனடியாக சிசிடிவி பதிவ ஆராய்ஞ்சுகிட்டு இருந்துருக்குறாரு. ஆனா அதுக்குல்ல மைக்கு அலறி இருக்கு…. அது பேசின இரண்டெழுத்து அதிகாரி… என்னய்யா நீ நைட் டூட்டின்னாலே வழிபறி சம்பவம் நடக்குது. நீயே நாலு ஆள செட் பண்ணி அனுப்புறீயா… உனக்கும் பங்கு இருக்கு போல….. அடுத்த வழிபறிக்கு 4 பேர ரெடி பண்ணீட்டியா என்று வறுத்தெடுத்து உள்ளார். போலீஸ் அதிகாரிகள் தனக்கு கீழ வேல செய்றவங்கள பேசுவது என்னவோ வழக்கமான ஒண்ணுதான். ஆனா அதுவெல்லாம் தனிப்பட்ட முறையில செல்போனில் தொடர்பு கொண்டு நடக்கும், ஆனா ஓபன் மைக்குல திருடன்கிட்ட பங்கு வாங்கீட்டியா, ஆள செட்பண்ணீட்டியா என்று திட்டியதுதான் போலீசாரை நொந்து கொள்ள செய்துள்ளது…..இதுல சம்பந்தப்பட்ட அந்த ஸ்டேஷன் போலீசார் ஒரே நாளில் குற்றவாளிகள் நாலு பேரையும் தட்டி துாக்கீட்டாங்க என்பது தனி கதை……என்று கூறி முடிக்க காபி வந்து சேர்ந்தது. மூவரும் சூடான காபியை உறிய ஆரம்பித்தனர்.