கோவை, பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை பெரியபோது பகுதியை சேர்ந்த மணிகண்டசாமி – கௌரி தம்பதியரின் மகன் கார்த்திக். இவர் பொள்ளாச்சியை அடுத்த கணபதி பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடப்பாண்டு 10ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதி மாநிலத்தில் அதிக மதிப்பெண் வாங்கியோர் பட்டியலில் இடம் பிடித்தவர்களில் ஒருவராவார். 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மாணவருக்கு பள்ளி நிர்வாகம் தங்க நாணயம் பரிசாக அளித்தது மட்டும் இன்றி மாணவருக்கு வரக்கூடிய 11 மற்றும் 12ஆம் கல்வி ஆண்டின் செலவையும் பள்ளி நிர்வாகமே ஏற்றுள்ளது. மேலும் இது குறித்து முதலிடம் பிடித்த மாணவன் கூறுகையில், தன்னுடைய வெற்றிக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலும், தன்னுடைய கடின உழைப்புமே காரணம் என்று கூறியுள்ளார். எதிர் வரும் காலங்களில் படிப்பில் நல்ல நாட்டம் கொண்டு மேலும் பல சாதனைகளை புரிய விரும்புவதாகவும், நன்றாக படித்து IAS அதிகாரியாக ஆக வேண்டும், மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்பதே ஆசை எனவும் தெரிவித்தார். இந்த விவசாயியின் மகன் வெற்றியை கொண்டாடும் விதமாக பெற்றோர்களை பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்த தருணம் அனைவரின் மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
