பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்லும் பொதுமக்களிடம், ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தை விட 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 18-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், தொடர் விடுமுறையை முன்னிட்டு கடைசி நேர நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பொதுமக்கள் ஜனவரி 10-ம் தேதியே பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.
மக்களின் இந்தத் தேவையைப் பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை மிகக் கடுமையாக உயர்த்தியுள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து கோவை செல்ல வழக்கமாக 1,200 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில், தற்போது 3,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னை முதல் மதுரை வரை செல்ல வழக்கமாக 1,100 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் தற்போது 3,500 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. சில வழித்தடங்களில் 600 முதல் 800 ரூபாயாக இருந்த கட்டணம், தற்போது 4,000 ரூபாய் வரை எகிறியுள்ளது.
தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வழக்கமான 1,800 ரூபாய்க்கு பதிலாக 4,200 ரூபாயும், நாகர்கோவிலுக்கு வழக்கமான 900 ரூபாய்க்கு பதிலாக 1,500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் போன்ற தொடர் விடுமுறை காலங்களில் இத்தகைய கட்டண உயர்வு தொடர்கதையாகி வருகிறது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்தாலும், ஆம்னி பேருந்துகளின் கட்டண உயர்வு கட்டுக்கடங்காமல் செல்வதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதிகபட்சமாக 4,200 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது சாமானிய மக்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

