Skip to content

பொங்கல் பண்டிகை.. மண்பானை வாங்க குவியும் பெண்கள்

தமிழர்களின் ஒப்பற்ற திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கோலாகலமாக கொண்டாடப் பட உள்ளது.

குறிப்பாக தை மாதம் 1ம் தேதி கழனியில் விளையும் நெற்கதிர்களுக்கு தனது செங்கதிர்களை பாய்ச்சி செழிக்கச் செய்திடும் சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியப் பொங்கல் எனப் பெயரிடப் பட்டும், தை – ஆம்தேதி (16ஆம் தேதி) உழவுத் தொழிலுக்கு உற்றத் தோழனாக விளங்கிடும் கால்நடைகளை கவுரவப் படுத்தும் விதமாக மாட்டுப் பொங்கல் எனப் பெயரிடப் பட்டும்கொண்டாடப்படுகிறது.சூரிய பொங்கலன்று வாசலில் பொங்கல் வைக்க தமிழர்கள் தொன்று தொட்டு பாரம்பரியமாக மண் பானைகளையே பயன்படுத்தி வந்தனர். நவ நாகரிக காலத்தை கருத்தில் கொண்டு தற்போது சில்வர், பித்தளை பாத்திரங்களிலும், குக்கர்களிலும் பொங்கல் வைக்கும் காலம் வந்து விட்டது. அதற்கு மண் பானை உற்பத்தி குறைந்து போனதும் ஒரு காரணமாகவுள்ளது.

குறிப்பாக நகர்ப்புற மக்களே இது போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். இருந்தும் தங்கள் பாரம்பரிய வழக்கத்தை மறவாத கிராமப் புற மக்கள் இன்றளவும் மண் பானைகளில் பொங்கல் வைப்பதையே மரபாகக் கொண்டுள்ளனர்.இதற்காக பெரம்பலூரில் மண் பானைகள் விற்பனை இப்போதே தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

சாதாரண மண் பானைகள் 100 முதல் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், மண்பானையை சுற்றி வண்ண கோலமிட்டு அலங்கரித்து விற்கப்படும் பானைகள் சிறிய ரகம் 150க் கும், பொதுவான ரகம் ரூ.250க்கும், அதிகபட்சம் ரூ.300 வரைக்கும் விலைவைத்து விற்கப்பட்டு வருகிறது.

இதனை பெரம்பலூர் நகரைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வசிக்கும் நூற்றுக்கணக்கான பொது மக்கள் இப்போதே வாங்கி செல்கின்றனர். இதனால் பொங்கல் மண்பானைகள் விற்பனை ஜரூராக நடந்து வருகிறது.

error: Content is protected !!