தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் (அக்டோபர் 16, 2025) காலை தலைமைச் செயலக வளாகத்தில் தொடங்கியது. சபாநாயகர் ம.அப்பாவு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், கொள்கை விவாதங்கள் மற்றும் அரசு திட்டங்கள் தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.
கிட்னி திருட்டு முறைகேடு வழக்கு குறித்து திமுக அரசு உரிய விசாரணை நடத்தாமல் அலட்சியமாக செயல்படுவதாக எதிர்க்கட்சி அதிமுக கடுமையாக விமர்சித்தது கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி (ஈபிஎஸ்) உள்ளிட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ‘கிட்னிகள் ஜாக்கிரதை’ என்ற வாசகம் பொறிக்கப்பட்ட கருப்பு பேட்ஜ் அணிந்து அவைக்கு வந்தனர்.
பிறகு சட்டப்பேரவையில் “நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஏழை இளைஞர்களின் கிட்னிகள் திருடப்பட்டன. அரசு விசாரணை செய்யாமல் அழித்துக்கொண்டிருக்கிறது” என்று ஒரு எம்.எல்.ஏ. கேள்வி எழுப்பினார். அமைச்சர்கள், “விசாரணை தொடர்கிறது” என்று பதிலளித்தனர். அமைச்சர் மா. சுப்பிரமணியன், கிட்னி திருட்டு வழக்கில் அரசின் விரைந்த நடவடிக்கைகளை விளக்கினார். “தொலைக்காட்சியில் செய்தி வந்த உடனேயே முதல்வர் உத்தரவிட்டார்.
நாமக்கலில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டனர். 2 மேலும், மருத்துவமனைகளுக்கு கிட்னி மாற்று சிகிச்சைக்கு தடை விதிக்கப்பட்டது. ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடக்கிறது” என்று அவர் தெரிவித்தார். மேலும், தானம் என்ற பெயரில் உடலுறுப்பு விற்பனைக்கு எதிராக ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும், ஏழ்மை நிலையில் இருக்கும் மக்களுக்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சுப்பிரமணியன் கூறினார்.
அதே சமயம், உயர் நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடக்கிறது என்று சுப்பிரமணியன் விளக்கினார். தொடர்புடைய அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், உடல் உறுப்பு அறுவை சிகிச்சைக்கு காத்திருப்போருக்கு சிகிச்சை வழங்க பரிந்துரைக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
ஐஏஎஸ் அதிகாரி வினித் தலைமையிலான குழு நாமக்கல் பள்ளிப்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டதாகவும் கூறினார். கரூர் உடற்கூறு ஆய்வு குறித்த இபிஎஸின் கேள்விக்கு, “ஆட்சியரின் அனுமதியுடன் நள்ளிரவில் 14 மணி நேரம் நடந்தது. 5 மேஜைகளில் 25 மருத்துவர்கள் பங்கேற்றனர். சந்தேகம் கிளப்புவது அரசியல்” என்று சுப்பிரமணியன் பதிலளித்தார்.